

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரமறுப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா புதன்கிழமை கூறும்போது, “சபாநாயகரின் இந்த முடிவு நியாயமற்றது, பாரபட்சமானது மட்டுமன்றி சட்ட விதிகளுக்கும் முரணானது. நாடாளுமன்றம் உள்பட எல்லா அமைப்புகளையும் பலவீனப்படுத்த பாஜக கூட்டணி அரசு முயல்வது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் செவ்வாய்க் கிழமை நிராகரித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இக்கோரிக்கை தொடர்பாக அவை விதிமுறைகள் மற்றும் மரபுகளை நான் ஆராய்ந்தேன். மக்களவை காங்கிரஸ் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க இயலாது” என்றார்.
மக்களவை காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீ கரிக்கும்படி சுமித்ரா மகாஜனுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் சபாநாயகர் தனது முடிவை காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
“மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 44 உறுப்பினர்களே உள்ளனர். அவை விதிகள் மற்றும் மரபின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு குறைந்தபட்சம் 55 உறுப்பினர்கள் வேண்டும். 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லை” என்று சுமித்ரா மகாஜன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.