Published : 12 Nov 2018 02:19 PM
Last Updated : 12 Nov 2018 02:19 PM

சிபிஐ இயக்குநர் மீதான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தாமதம் ஏன்?- சிவிசியை கடிந்த உச்ச நீதிமன்றம்

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய ஏன் தாமதம் செய்தீர்கள் என்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தை கடிந்த கொண்ட உச்ச நீதிமன்றம் வரும் 16-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார்களை வெளிப்படையாகக் கூறினார்கள். இதனால், பெரும் இக்கட்டான சூழல் ஏற்பட்டதையடுத்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே கவுல் மற்றும் கே.எம் ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரfக்கப்பட்டது . அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ சிபிஐயின் தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்ட அக்டோபர் 23-ம் தேதி முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் இதுவரை எடுத்த எந்த முடிவையும் நடைமுறைப்படுத்தக் கூடாது.

அடுத்த விசாரணை நவம்பர் 12-ம் தேதி நடைபெறும். அதுவரை முக்கியமான கொள்கை முடிவு எதையும் நாகேஸ்வர் ராவ் எடுக்கக் கூடாது. சிபிஐ அதிகாரிகள் மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை இரண்டு வார காலங்களுக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையம் முடித்துக் கொள்ள வேண்டும். முன்னாள் நீதிபதி பட்நாயக் இந்த விசாரணையைக் கண்காணிப்பார். வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும்” என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணை அனைத்தும் 10-ம் தேதி முடிந்துவிட்டது என்று கூறினார்.

“அறிக்கையை 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்யக் கூறி இருந்தோம். ஆனால், ஏன் தாமதமாகத் தாக்கல் செய்கிறீர்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 வரை உச்ச நீதிமன்றம் பதிவாளர் அலுவலகம் திறந்திருந்தது ஏன் தாக்கல் செய்யவில்லை” என்று துஷார் மேத்தாவிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிந்து கொண்டார்.

அதற்கு துஷார் மேத்தா, “உச்ச நீதிமன்றத்தை அடையத் தாமதம் ஆகிவிட்டது, நாங்கள் வந்தபோது, அலுவலகம் மூடப்பட்டு இருந்தது” என்று பதில் அளித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்று எந்தத் தகவலும் உங்களிடம் இருந்து இல்லையே. பதிவாளர் அலுவலகத்தில் முன்கூட்டியே கூறிவிட்டு, நண்பகல் ஒரு மணிக்குக்கூட அறிக்கையை நீங்கள் தாக்கல் செய்திருக்க முடியும்” என்று கடிந்து கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட என்ஜிஓ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறுகையில், “அலோக் வர்மா மீதான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், அவரை நீக்கவும் அக்டோபர் 23-ம்தேதி நள்ளிரவு 2 மணிவரை கூட ஊழல் தடுப்பு ஆணையம் அலுவலகத்தைத் திறந்துவைத்திருக்கும். ஆனால், விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதியிடம் மன்னிப்பு கோரி, விசாரணையை அறிக்கையைத் தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதையடுத்து, அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கையும், நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை அறிக்கை மீதான விசாரணை வரும் 16-ம்தேதி நடைபெறும் என்றும், நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை மீறியிருப்தாக அறிந்தால் தாராளமாக மனுத்தாக்கல் செய்யலாம் என்று வழக்கறிஞர் தவேவுக்கு தலைமை நீதிபதி கோகாய் அனுமதி வழங்கினார்.

இதற்கிடையே சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ விசாரணை அதிகாரி ஏ.கே.பாசியை போர்ட் பிளேயருக்கு இடமாற்றம் செய்து தற்காலிக சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர் ராவ் உத்தரவிட்டார். இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x