

பிஹாரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 10-ல் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அறிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அரசியல் வாரிசுகளுக்கு இடம் தர மறுத்து விட்டது. பாஜக (4), ஐக்கிய ஜனதா தளம் (1) கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (3), பாஜக (2) கட்சிகளின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர்.
இதனால் காலியாக உள்ள 10 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பாஜக எம்பிக்களும் தாங்கள் காலி செய்த தொகுதியில் தங்களது வாரிசு அல்லது உறவினர்களுக்கு வாய்ப்பளிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு கட்சித் தலைமை மறுத்து விட்டதாகக் கருதப்படுகிறது.
இதுபற்றி ‘தி இந்து’விடம் பிஹார் மாநில பாஜக வட்டாரம் கூறும்போது, “வாரிசு அரசியலை ஊக்குவிக்கக் கூடாது என்பதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. இந்த முறை, மண்டல் கமிஷனை மனதில் வைத்து அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம் விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்திக்கு மீதம் உள்ள ஒரு தொகுதியை பாஜக ஒதுக்கி உள்ளது. மற்றொரு கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் சம்தாவுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் 3 எம்பிக்களை வைத்திருக்கும் அக்கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் இப்போதைய அரசுக்கு சிக்கல் இல்லை. எனினும் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக இது கருதப்படுகிறது. எதிரெதிர் துருவமாக இருந்த நிதிஷ் குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.