

அருணாச்சல பிரதேசத்தில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு மாநில ஆளுநர் தக்க சமயத்தில் உதவி செய்து, ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்சியடைய செய்துள்ளது.
அருணாச்சல பிரதேச மாநில ஆளுநராக, முன்னாள் ராணுவ அதிகாரி பி.டி. மிஸ்ரா பதவி வகித்து வருகிறார். தவாங் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், இடாநகர் மருத்துவமனைக்கு அவசரமாக செல்ல வேண்டும் என அப்போது எம்எல்ஏ ஒருவர் கூறினார்.
இதையடுத்து. ஆளுநர் மிஸ்ரா, அந்த பெண்ணையும், அவரின் கணவரையும் தனது ஹெலிகாப்டரில் அழைத்துக் கொண்டு உடனடியாக இடாநகர் நோக்கி சென்றார். தன்னுடன் ஹெலிகாப்டரில் வந்த 2 அதிகாரிகளை தவாங்க் நகரில் தங்க உத்தரவிட்டார்.
அவர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர், அசாமின் தேஜ்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டது. எரிபொருள் நிரப்பியபின்னர், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வேதனை அதிகரித்தது.
இதையடுத்து தேஜ்பூர் விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆளுநர் விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைத்தார். நிறைமத கர்பிணியான அந்த பெண்ணையும், கணவரையும் இடா நகருக்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார்.
ஹெலிகாப்டர் தரையிறங்கும் முன்பாகவே ஆம்புலன்ஸ் தயார் செய்யப்பட்டது. அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய ஆளுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.