

மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்குச் சென்றபோது, அவருடன் வந்த கார்களை நிலக்கலுடன் நிறுத்திவிட்டு பஸ்ஸில் செல்லும்படி வலியுறுத்திய போலீஸ் எஸ்.பி. யதீஷ் சந்திரா தலைமை மாற்றப்படுகிறது.
அதற்குப் பதிலாக புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் போலீஸார் நிலக்கல் பகுதியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரள மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை மகரவிளக்கு சீசன் தொடங்கிவிட்டதால், பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் போலீஸார் விதித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையால், பம்பையில் வாகனங்களை நிறுத்தும் இடம் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால், அதற்குப் பதிலாக அடிவாரப் பகுதியான நிலக்கலில் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தக் கூறியுள்ளனர்.
அதன்பின் பக்தர்கள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது. கேரள அரசுப் பேருந்தில்தான் செல்ல முடியும்.
இந்நிலையில், மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விரதம் இருந்து இருமுடிகட்டி கடந்த 21-ம்தேதி சபரிமலைக்குச் சென்றார். அமைச்சரின் அதிகாரபூர்வ வாகனம் சபரிமலை சன்னிதானத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் பகுதி வந்தவுடன் அதற்கு மேல் செல்ல போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். நிலக்கல் பகுதியில் போலீஸ் எஸ்.பி. யதீஷ் சந்திரா தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தனியார் வாகனங்களையும், அமைச்சர் வாகனங்களையும் பம்பை வரை செல்ல அனுமதிக்க அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோரினார். ஆனால், போலீஸார் திட்டவட்டமாக மறுத்து, அரசுப் பேருந்தில்தான் செல்லவேண்டும் என்று தெரிவித்தனர்.
அமைச்சர் வேண்டுமானால் அவரின் அதிகாரபூர்வ வாகனத்தில் செல்வதற்கு தடையில்லை என்று எஸ்.பி. யதீஷ் சந்திரா தெரிவித்தார். வாகனங்களை அனுமதிக்கக் கோரும் விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும், எஸ்.பி. யதீஷ் சந்திராவுக்கும் இடையே சிறிய அளவிலான வாக்குவாதம் நடந்தது. பின்னர், ராதாகிருஷ்ணன் அரசுப் பேருந்தில் சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினார்.
இந்நிலையில், நிலக்கலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ். பி. யதீஷ் சந்திரா தலைமையிலான படை மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையிலான போலீஸார் பிரிவு நிலக்கல் பகுதியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள உள்ளதாக கேரள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் அவமரியாதையாக நடந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டு கூறுகிறார்களே என எஸ்.பி. யதீஷ் சந்திராவிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ''முறையாகப் புகார் அளித்து என்னிடம் விளக்கம் கேட்டால், அதற்கு என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன். சபரிமலையில் பாதுகாப்புப் பணிகள் சுமுகமாக நடந்து செல்கின்றன. எந்தவிதமான இடையூறும் இல்லை. எங்களின் நோக்கம் வெளிமாநில பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் இடையூறின்றி சாமி தரிசனம் செய்து கேரள அரசையும், போலீஸையும் புகழ வேண்டும்'' என்று தெரிவித்தார்.
புதிதாக வரும் அதிகாரி அசோக் யாதவ் வரும் 29-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கிடையே நவம்பர் 30 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நிலக்கல் பகுதியில் பணியாற்ற உள்ள போலீஸார் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.