

குஜராத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட சர்தார் படேல் சிலையைவிட உயரமாக, வீரசிவாஜி சிலையை அமைக்க கூடாது என மகாராஷ்டிர அரசை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் மிரட்டி வருவதாக சிவசேனா புகார் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
‘ஒற்றுமையின் சிலை’ என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரமுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த மாதம் திறந்து வைத்தார். இதற்கு போட்டியாக மகாராஷ்டிர பாஜக அரசு சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலையை உருவாக்கி வருகிறது. தொடக்கத்தில் 98 மீட்டர் உயரம் கொண்டதாகத்தான் இது திட்டமிடப்பட்டது.
ஆனால், வல்லபாய் படேலின் சிலைவிடவும், 192 மீட்டர் உயரத்தில் சிவாஜியின் சிலையை அமைக்க பின்னர் முடிவு செய்யப்பட்டது. வீர சிவாஜியின் சிலை 212 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்படும் என தகவல் வெளியாகியது. இதன் மூலம், உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமை வீரசிவாஜி சிலைக்கு கிடைக்கும் என கூறப்பட்டது.
இந்தநிலையில் வீரசிவாஜியின் சிலை உயரத்தை செலவை காரணம் காட்டி குறைக்க மகாராஷ்டிர மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. முன்பு திட்டமிட்டதைவிட 20 மீட்டர் உயரத்தை குறைக்கவும், இதன் மூலம் 340 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடிவு செய்து புதிய வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகிலேயே உயரமான சிலையாக வீரசிவாஜி சிலை அமைக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு மராத்தியர்களும் விரும்புகின்றனர். அதற்கு ஏற்றவகையில் அந்த சிலையை அரபிக்கடலில் அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் சிலையின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. வீரசிவாஜியின் சிலை உயரத்தை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? உலகிலேயே உயரமான சிலை என்ற பெயரை தற்போது படேல் சிலை பெற்று விட்டது. அதைவிட உயரமான சிலை அமைக்கப்படக்கூடாது என்பது பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் முடிவு.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இந்த முடிவை மீற முடியவில்லை. உண்மையில் அவருக்கு துணிச்சல் இருந்தால் இருவரின் உத்தரவை மீற வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை பார்த்து பயப்படுவதை பட்னவிஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும். மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு அளித்த அதே துணிவை இந்த விவகாரத்திலும் பட்னவிஸ் காட்ட வேண்டும்.
இவ்வாறு சாம்னா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.