

இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணைய தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கட்டுரை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வெள்ளிக்கிழமை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்சினையை தமிழக அரசு எழுப்புவதை விமர்சித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இந்த கட்டுரை வெளியானது.
மக்களவையில் இதுபற்றி அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி இலங்கை வெளியிட்ட கட்டுரையை கடுமையாக கண்டிக்கிறோம். இந்தியாவின் இறையாண்மையை இது மீறுவதாக இருப்பதால் மத்திய அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இணைய தளத்தில் தனிநபர் ஒருவர் எழுதிய கட்டுரை முதல்வரை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. இந்த கட்டுரை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியானது மோசத்திலும் மோசமாகும். இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.
மாநிலங்களவையில்
மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை பூஜ்ய நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பன் எழுப்பினார். நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதிய காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தம் உடையவை என்ற தலைப்பிட்டு வெளியான சர்ச்சைக்குரிய கட்டுரை பலத்த ஆட்சேபம் காரணமாக இணைய தளத்திலிருந்து அகற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் இலங்கையை கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கட்டுரை விவகாரத்தில் இலங்கை மன்னிப்பு கோர மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
கேள்வி நேரத்தை ரத்து செய்யும்படி நோட்டீஸ் கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி ராஜா மாநிலங்களவையில் பேசியதாவது: மீனவர் பிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் குறித்து வெளியிடப்பட்ட அருவருக்கத் தக்க கருத்து கொண்ட கட்டுரை, பலத்த எதிர்ப்பு காரணமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இலங்கையிடம் இருந்து மன்னிப்பு கோரவேண்டும். இணையதளத்திலிருந்து கட்டுரை நீக்கப்பட்டாலும் இந்த பிரச்சினை ஓயப்போவதில்லை.
மத்திய அரசிடம் பிரச்சினையை எடுத்துச் செல்லும் ஒரு மாநில முதல்வரை எப்படி அவர்கள் இழிவான வகையில் விமர்சிக்க முடியும். சர்வதேச கருத்துகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்காத நாடு இலங்கை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நடத்திய அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் பற்றி நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்த முன்வராத நாடு இலங்கை. அத்தகைய நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை இழிவுபடுத்துவதை சகிக்க முடியாது. இவ்வாறு ராஜா கூறினார்.