

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டுவந்தால் ஆதரிப்பீர்களா மாட்டீர்களா என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ராகேஷ் சின்ஹா எதிர்க்கட்சி தலைவர்களிடம் கிடுக்கிப்பிடிகேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவசியமாகிறது. ஆனால் இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் முடிவெடுக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதேநேரம், ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, லாலு பிரசாத் ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அயோத்தி ராமர் கோவில் கட்டத் தொடங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட தனிநபர் மசோதா கொண்டுவந்தால் அதை ஆதரிப்பாளர்களா? மாட்டார்களா? அவர்களுக்கு இதில் பொறுப்பு உள்ளதுதானே?
உச்சநீதிமன்றம், தனது விசாரணையில் 377 வது பிரிவு, ஜல்லிக்கட்டு, சபரிமலா ஆகியவற்றின்மீது தீர்ப்பு வழங்க எத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டது? ஆனால் அயோத்தி விஷயத்தில் முன்னுரிமை தந்து தீர்ப்பு வழங்கப்படாமல், நீதிமன்றம் பல பத்தாண்டுகளாக தாமதப்படுத்தி வருகிறது. ஆனால் இது இந்து சமுதாயத்தின் மிக முக்கிய முன்னுரிமையுள்ள ஒரு பிரச்சினையாகும்.
இவ்வாறு பாஜக எம்பி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.