Published : 24 Nov 2018 05:17 PM
Last Updated : 24 Nov 2018 05:17 PM

‘சுயதம்பட்டம் ஏன்?’ - நிருபர் குத்தல் கேள்வி; ‘எனக்கும் இந்தி தெரியும்’:நிர்மலா சீதாராமன் ஆவேசம்

போபால்:  கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் 2016ம் ஆண்டு துல்லியத் தாக்குதல் குறித்த நிருபர் ஒருவரின் கேள்வியில் கிண்டல் தொனி இருந்ததையடுத்து மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்திரமடைந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர், 2016ல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை 2 ஆண்டுகள் கழித்து ஏன் தண்டோரா போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

இதற்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “உங்கள் கேள்வியில் இருந்த கேலி தொனி என்னை காயப்படுத்துகிறது. நீங்கள் பயன்படுத்திய வார்த்தை... எனக்கும் இந்தி தெரியும்” என்றார்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி அங்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அமைச்சர்கள் என முக்கியப் பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர், "எல்லையில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் குறித்து மத்திய அரசு தம்பட்டம் அடிப்பது ஏன்? அது ராணுவ வீரர்களின் துணிச்சலை கூறுவதற்காகவா? காங்கிரஸ் ஆட்சியில் அப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லையா?" என்று கேள்விகேட்டார்.

அவர் இந்தியில்  bin bajaye அதாவது தம்பட்டம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "எனக்கு இந்தி தெரியும். உங்களது குத்தலான கேள்வி என்னை காயப்படுத்துகிறது. ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும். நாம் அவர்களை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும். மாறாக அவமானமாக கருத அதில் ஏதுமில்லை. நாம் நமது எதிரிகளை அழித்துள்ளோம். தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை மகிமைப்படுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது தேசத்தின் பெருமித அடையாளம் என சுய விளம்பரம் செய்திருப்பார்கள்" எனக் கூறினார்.

நிர்மலா சீதாராமன் ஆவேசமடைந்தபோது மற்ற பத்திரிகையாளர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x