

சபரிமலை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு சீசனுக்காக நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வந்தனர்.
கேரள சட்டப்பேரவையில் இந்த பிரச்சினை இன்று எதிரொலித்தது. கேரள சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளிப்பார் என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். ஆனால் அவை அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு சபரிமலை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
உடனடியாக சபரிமலையில் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் எனக்கோரி பதாகைகளை ஏந்தியபடி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அமளிக்கு இடையே வெள்ளம் தொடர்பான உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முதல்வர் பினராயி விஜயன் முயன்றார்.
இதையடுத்து அவையின் மையப்பகுதிக்கு சென்று தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முக்கிய பிரச்சினைகளை பற்றி பேச சபையில் அனுமதிக்கப்படுவதில்லை என கூறினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நோக்கம் சபரிமலை அல்ல; அவை நடவடிக்கையை எதிர்ப்பது தான் என்றார்.
இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பதிலுக்கு பதில் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து சிறிது நேரம் அவை நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.