

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
மும்பை உயர் நீதிமன்றம் கோவா கிளை கடந்த 14-ம் தேதியன்று தேஜ்பால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, இவ்விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கோவா காவல்துறைக்கு உத்தரவிட்டது.
தேஜ்பால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், கோவாவில் இருந்து வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதியன்று கோவாவில் நடந்த ஒரு விழாவின் போது சக பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது தேஜ்பால் மீதான குற்றச்சாட்டாகும்.