

பிஹாரின் நாளந்தா மாவட்டம் ராஜ்கிர் நகரில் கோரா கட்டோரா ஏரியில் 70 அடி உயரத்துக்கு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகளில் 2-வது மிக உயரமான சிலையாகும்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த புத்தர் சிலையை நேற்று திறந்துவைத்தார். ஏரியில் படகு மூலம் புத்தர் சிலைக்கு சென்ற அவர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். கயா மகாபோதி பவுத்த கோயிலின் தலைமை குரு பாண்டே சாலிண்டா பூஜையை வழிநடத்தினார்.
முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்களிடம் கூறியபோது, "இந்த புனித தலத்துக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் இயக்கப்படாது. மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும். இது மிகச் சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக உருவெடுக்கும்.
இதே பகுதியில் குருத்வாரா அமைக்க சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு வனத்துறை, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் குருத்வாரா கட்டும் பணி தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.