

அமெரிக்காவில் வசித்து வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள வெண்ட்னர் எனும் பகுதியில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில், ஹோட்டல் ஒன்றையும் இவர் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை இரவு, ஹோட்டலில் இருந்து வீடு திரும்பிய அவரை அங்கிருந்த 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவரது காரை எடுத்துச் சென்றான். இதில் சம்பவ இடத்திலேயே எட்லா உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த 'டிராக்கிங்' கருவி மூலமாக அந்த சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். எட்லாவை சுட்டுக் கொன்றதற்கான காரணம் குறித்து அமெரிக்க போலீஸார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.