

பெண் நீதிபதிக்கு காதல் கடிதம் எழுதிய வங்கி மோசடி வழக்கு குற்றவாளிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் வங்கி மோசடி தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், பூஷன் ஸ்டீல் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கடன் அளவை உயர்த்த லஞ்சம் பெற்றதாக சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுதிர் குமார் ஜெயின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வங்கி அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற பெண் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரது நீதிமன்ற காவலையும் நீட்டித்தார். பின்னர் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, வழக்கறிஞரைப் பார்த்து, “உங்கள் கட்சிக்காரர் எனக்கு காதல் கடிதம் எழுதி வருகிறார். அதை நிறுத்தச் சொல்லுங்கள். நான் ஏற்கனவே நல்ல வசதியான குடும்பப் பின்னணியில் இருந்துதான் வந்துள்ளேன். கடிதம் எழுதுவதை நிறுத்தாவிட்டால், சிபிஐ மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.
ஜெயின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது உறவினர் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஜெயின் தவிர, பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகி வேத் பிரகாஷ் அகர்வால், பூஷன் ஸ்டீல் துணைத் தலைவர் நீரஜ் சிங்கால் உள்ளிட்டோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெயின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியபோது, ரூ.21 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.68 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.