

கர்நாடகாவில் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளார் பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகர். இவர் 20 நாட்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்துள்ளார்.
ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் மீண்டும் காங்கிரஸ் திரும்புவதாகவும் அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் (நவம்பர் 3) இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது கர்நாடக பாஜகவுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
இவர் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியும் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளருமான அனிதா குமாரசாமிக்கு எதிராகப் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான சி.எம்.லிங்கப்பாவின் மகனான சந்திரசேகர், கடந்த அக்டோபர் 10-ம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு அனிதா குமாரசாமியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் மூத்த பாஜக தலைவர்கள் இடையே சந்திரசேகருக்கு முரண்பாடு இருந்துவந்த நிலையில் வேட்பாளராகப் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர், ''முன்னாள் பாஜக அமைச்சர் சி.பி.யோகேஸ்வர் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார். ஆனால் ஒரு பாஜக தலைவர் கூட தொகுதிப் பக்கம் வரவில்லை. பாஜக ஒரு பிளவுபட்ட வீடு'' என்றார்.
நவம்பர் மூன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் நவ.6-ம் தேதி எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.