

அயோத்தியில் நவம்பர் 25 முதல் ராமர் கோயில் பணி தொடங்கப்பட உள்ளதாக உ.பி.யின் பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங் அறிவித்துள்ளார். மத நம்பிக்கையை விட பெரியது எதுவும் இல்லை என்பதால், தேவை எனில் அனைத்து சட்டங்களையும் மீற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 29 முதல் ராமர் கோயில் மீதான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இது அடுத்த வருடம் ஜனவரிக்கு என ஒத்தி வைத்ததன் காரணமாக இந்துத்துவாவினர் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.
இதனால், ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றக்கூறி மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நவம்பர் 25-ல் அயோத்தி, நாக்பூர் மற்றும் பெங்களூரூவில் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) சார்பில் தர்மசபை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், தர்மசபையில் கலந்துகொள்ள பாஜக எம்எல்ஏவான சுரேந்திரா சிங் தம் ஐந்தாயிரம் ஆதரவாளர்களுடன் அயோத்திக்குச் செல்கிறார். அங்கு ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பைரியாவின் பாஜக எம்எல்ஏவான சுரேந்திரா சிங் கூறும்போது, ''ராமருக்கு அடுத்தபடியாகத் தான் சட்டம் உள்ளது. இதை நாம் கடந்த 1992-ல் காட்டி இருந்தோம். இதை மீண்டும் பைரியாவினர் இந்து புரட்சியில் கலந்துகொண்டு நவம்பர் 25-ல் காட்ட உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக நேற்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவரான அமித் ஷா, ''ராமர் கோயில் விஷயத்தில் எந்தக் குழப்பமும் தேவை இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டப்படும்'' எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில், அயோத்தியில் விஎச்பி நடத்தும் தர்மசபைக் கூட்டத்திற்கு சாது மற்றும் மடாதிபதிகளுடன், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ராம பக்தர்கள் வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டி அயோத்தியில் உ.பி. போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.