

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும், பிரதான எதிர்க்கட்சியான மிசோரம் தேசிய முன்னணிக் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இத்தேர்தலில் பாஜகவும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) நேற்று வெளியிட்டது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதன்படி, மிசோரம் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான லால் தங்காவ்லா உட்பட 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருக்கிறது. இவர்களில் பாஜக, காங்கிரஸ், மிசோரம் தேசிய முன்னணிக் கட்சி ஆகிய வேட்பாளர்களும் அடங்குவர். மேலும், இவர்களில் 4 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துளளது. - பிடிஐ