

சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தலான சூழலை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று அனுமதித்து கடந்த என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்நிலையில், பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் நேற்று முன்தினம் கொச்சி வந்தனர். ஆனால், அவர்களை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவிடாமல் பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால், அவர் நேற்று முன்தினம் இரவே புனே புறப்பட்டுச் சென்றார்.
மேலும், சபரிமலைக்கு இருமுடியுடன் செல்ல முயன்ற இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் சசிகலாவை போலீஸார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். இதனால், பம்பை முதல் சபரிமலை வரை சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவரை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டலப் பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டு, நேற்று அதிகாலை 3 மணிக்கு முதல்கட்டப் பூஜையுடன் தொடங்கியது. இதைக் காண்பதற்காக தமிழகம், தெலங்கானா, கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலையே சபரிமலையில் இருமுடியுடன் குவியத் தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே சபரிமலையில் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சர்களுமான திருவச்சனூர் ராதாகிருஷ்ணன், அடூர் பிரகாஷ், வி.எஸ்.சிவகுமார் ஆகியோர் சென்று ஆய்வு செய்து திரும்பினார்கள்.
அதன்பின் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''சபரிமலைப் பகுதி பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாறி இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குள் நுழைய மிகுந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதிகமான போலீஸ் குவிப்பால் வழக்கமாக வரும் பக்தர்கள் கூட்டமும் பாதிக்கப்படுகிறது'' என்று குற்றம் சாட்டினார்.
கொன்னி சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ் கூறுகையில், ''சபரிமலைக்குப் பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் போலீஸாரை கேரள அரசு குவித்து இருப்பதால், அச்சுறுத்தலான சூழல் நிலவுகிறது'' எனத் தெரிவித்தார்.
முன்னாள் தேவஸம் போர்டு அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், ''சபரிமலை சீசன் தொடங்கிவிட்டதால், இனி ஏராளமான பக்தர்கள் இனி மலைக்கு வருவார்கள், அவர்களுக்கு போதுமான வசதிகளைக் கேரள அரசு ஏற்படுத்தித் தரவில்லை. நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதியில் அடிப்படை வசதியில்லாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
பக்தர்களுக்கு அத்தியாவசியமான வசதிகளை, கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க அரசுக்கு விருப்பமில்லை. மாறாகப் பக்தர்களுக்கு இடையூறு செய்வதில் விருப்பமாக இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.