Last Updated : 27 Nov, 2018 03:34 PM

 

Published : 27 Nov 2018 03:34 PM
Last Updated : 27 Nov 2018 03:34 PM

காங்கிரஸைப் போலவே சந்திரசேகர் ராவும் தெலங்கானா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை: பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் கட்சியைப் பின்பற்றி ஆட்சி நடத்தும் டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸைப் போலவே மக்களுக்கும், மாநிலத்துக்கும் ஒன்றும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் முதல் முறையாகப் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.

நிஜாமாபாத்திதல் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சிகளைக் கடுமையாக சாடினார்.

இது தொடர்பாக மோடி பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சியும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் குடும்ப ஆட்சி நடத்தும் கட்சிகள். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் நட்புரீதியான விளையாட்டில் பங்கேற்கின்றன.

காங்கிரஸ் கட்சி கடந்த 52 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாததைப் போலவே அந்தக் கட்சியைப் பின்பற்றியே ஆட்சி செய்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும், தெலங்கானாவுக்கும், மக்களுக்கும் ஒன்றும் செய்யாமல் செல்கிறார்.

பாஜகவைப் பொறுத்தவரை அனைவருக்கும் முழுமையான வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆனால், வாக்கு வங்கி அரசியல் நோக்கில் செயல்படும் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சியை வளர்ச்சியைக் கரையான் போல் அரிக்கிறார்கள்.

சந்திரசேகர் ராவுக்கு அவர் மீதே நம்பிக்கையில்லை. பாதுகாப்பில்லாத உணர்வுடன் இருக்கிறார். அதனால்தான் எப்போதும் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி மூட நம்பிக்கைகளிலும், கெட்ட சக்திகளின் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

சந்திரசேகர் ராவ் ஆட்சிக்கு வந்தபோது, நிஜாமாபாத்தை லண்டன் போல் மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்னும் இந்த நகரில் மக்கள் குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை. மின் பற்றாக்குறை நிலவுகிறது, முறையான சாலை வசதி இல்லை.

மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநிலத்தைச் சேர்க்கவில்லை. அவ்வாறு சேர்ந்திருந்தால், ஏழை மக்களின் மருத்துவச் செலவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கும். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்குகிறோம். இந்தத் திட்டத்தை மக்களிடத்தில் அறிமுகம் செய்தால், தன்னை மக்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் கொண்டு வரவில்லை. மாநில மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டார் சந்திரசேகர் ராவ்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்காகத் தனி பள்ளிக்கூடம், மருத்துவமனை உண்டாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த முயற்சி, முழுமையான வளர்ச்சி என்ற மந்திரத்தின் கீழ் பாஜக செயல்படுகிறது. வாக்குவங்கியைக் கடுமையாக பாஜக எதிர்க்கும்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x