சபரிமலை குறித்த அமித் ஷா கருத்து சரிதான்: முகநூலில் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து

சபரிமலை குறித்த அமித் ஷா கருத்து சரிதான்: முகநூலில் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி சபரிமலை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு முகநூலில் கூறியிருப்பதாவது: நான் பாஜக ஆதரவாளன் அல்ல. என்றாலும் சபரிமலை விவகாரத்தில் நடைமுறைப்படுத்த முடியாத உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது என பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பதை ஏற்கிறேன்.

சபரிமலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் மாறுப்பட்ட தீர்ப்பு கூறிய நீதிபதி இந்து மல்ஹோத்ரா, “மதம் என்பது நம்பிக்கை தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது” என நுட்பத்துடன் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹஸ்ரத்பால் என்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் தலைமுடி இருப்பதாக நம்பப்படுகிறது. இது உண்மையிலேயே நபிகளின் முடிதானா என கேள்வி எழுப்பக்கூடாது.

மாறாக மக்கள் இதை நம்புகிறார்களா என கேள்வி எழுப்ப வேண்டும். இதற்கு ஆம் என்று பதில் வந்தால், பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது. சபரிமலை கோயிலை பொறுத்தவரை கடவுள் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என பக்தர்களால் நம்பப்படுகிறது. பக்தர்கள் 41 நாட்கள் பிரம்மச்சர்யம் கடைபிடித்து, விரதம் இருந்து கோயிலுக்கு புறப்படுகின்றனர்.

எனவே இங்கு இளம் பெண்களை அனுமதிப்பது, கோயிலின் அடிப்படை நியதியை பாதிக்கும். பெரும்பாலானோர் மத நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான தீர்ப்புகளை ஏற்க முடியாது. இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in