கேரளா சென்றார் திருப்தி தேசாய்: கொச்சி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம்

கேரளா சென்றார் திருப்தி தேசாய்: கொச்சி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம்
Updated on
2 min read

சபரிமலை கோயிலுக்கு செல்லப்போவதாக அறிவித்த பாலின சமத்துவ ஆர்வலர்  திருப்தி தேசாய் கேரளாவைச் சென்றடைந்த நிலையில் அவர் கொச்சி விமான நிலையத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மூன்றாவது முறையாக திறக்க உள்ள நிலையில் அங்கு 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சூழ்நிலையில் பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். எனினும் அவர்கள்  விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுப் பெண்கள் வரை சாமி தரிசனம் செய்ய நூற்றாண்டுகளாகத் தடை இருந்தது. இந்தத் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இளம் வழக்கறிஞர்கள் அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டவர் திருப்தி தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 28 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்புக்கு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பல்வேறு நகரங்களில் பேரணிகள், போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தபிறகு மூன்றாவது முறையாக ஐயப்பன் கோயில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிஅளவில் நடை திறக்கப்படுகிறது. கோயில் மரபுகளில் எந்தவித மாற்றத்தையும் செய்யக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கடுமையாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடையூறு செய்யவே

விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கையில், ''10 வயதிலிருந்து 50 வயதுவரை உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு நூற்றாண்டுகள் பழமைமிக்க கோயிலின் புராதன மரபுகள் அனுமதிக்கவில்லை.

இதை மதிக்காமல் விதிகளை மீறி திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்துள்ள ஆறு பேர்கொண்ட குழுவினர் வந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேறவும், சபரிமலை கோயிலுக்குச் செல்லவும் பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  அவர் (தேசாய்) தரிசனம் செய்ய வரவில்லை. பக்தர்கள் யாத்திரை சென்று தரிசிக்க உள்ள சபரிமலையின் அமைதியான சூழ்நிலையை இடையூறு செய்யவே வந்துள்ளார்.''

இவ்வாறு பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பெண்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் என பெரிய அளவில் கூடி விமானநிலையத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்டனர். அவர்கள் தொடர்ந்து ஐயப்பன் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் சூழலை உணர்ந்த காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். காவல் அதிகாரிகள் தேசாய் மற்றும் எதிர்ப்பாளர்களுடன் விவாதங்களை நடத்தினர். ஆனால் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.

தரிசிக்காமல் திரும்பமாட்டேன்

தொலைபேசி மூலம் செய்தி ஊடகத்திடம் பேசிய தேசாய், ''ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்யாமல் மகாராஷ்டிராவுக்கு திரும்பிச் செல்லமாட்டேன். என்னுடன் வந்திருப்பவர்களுக்கும் சேர்த்து பாதுகாப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை கேரள அரசின்மீது எனக்கு உள்ளது.

உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பளித்தால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டியது மாநில அரசு மற்றும் காவல்துறையினரின் பொறுப்பு ஆகும்.

இவ்வாறு திருப்தி தேசாய் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு அருகே உள்ள டாக்சி டிரைவர்கள், ''விமான நிலையத்திற்கு வெளியே தேசாயையும் அவரது சக ஆர்வலர்களையும் அழைத்துச் செல்ல மாட்டோம்'' என்று தெரிவித்தனர்.

சூழ்நிலையைச் சமாளிக்க விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பெரும் எண்ணிக்கையிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in