

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகுதியின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட வேண்டும்; பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்கக் கூடாது என பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது வலைப்பூவில் கூறியிருப்பதாவது:
மிக மூத்த நீதிபதிதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமர்த்தப்பட வேண்டும் என அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை. அதுபோன்ற வரையறுக்கப்பட்ட விதிமுறையும் இல்லை. ஆகவே, மிகச் சிறந்த உயர் நீதிமன்ற நீதிபதிகூட நேரடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் இந்திய நீதித்துறையின் தலைவர். தகுதிக் குறைவான ஒருவரின் நியமனம் பல ஆண்டுகளுக்கு அத்துறையைப் பாதிக்கக் கூடும்.
தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா ஓய்வு பெற்றால், அடுத்த நியமனத்துக்கு பணி மூப்பின் அடிப்படையில் நீதிபதியைத் தேர்வு செய்யாமல், தகுதியான ஒரு நபரை இந்திய அரசு நியமிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்யப்படும் தகுதியுள்ள சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருக்கின்றனர், என அவர் தெரிவித்துள்ளார்.