

குறைபாடுள்ள கருவைக் கலைப்பதற்கு அனுமதிக்கப் பட்டுள்ள கால அளவை 20 வாரத்தில் இருந்து 28 வாரமாக உயர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மனித உரிமைகள் சட்ட அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது:
கருவில் உள்ள குழந்தை குறைபாடுள்ளதாக இருந்தால், 20 வார கால அளவு வரை, மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்வதற்கு மத்திய அரசின் மருத்துவ கருக் கலைப்புச் சட்டம் 1971-ல் அனுமதி அளித்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இந்தக் காலகட் டத்தில் எந்த நிலையிலும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய முடியும். மத்திய அரசின் சட்டம் இன்றைய காலகட்டத்துக்கு பொருத்தமற்றதாக உள்ளது. இச்சட்டம், பெண்கள் தங்களின் உடல்நிலையை பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே, இச்சட்டம் சட்ட விரோத மானது.
இந்தியாவில் ஆண்டுக்கு 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில், இரண்டு முதல் மூன்று சதவீதம் குழந்தைகள் கரு வளர்ச்சியின்போது குறைபாடு அல்லது குரோமோசோம் மாறு பாடுகளுடன் பிறக்கின்றன. இத்தகைய குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பது பெற்றோருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, குறைபாடுள்ள கருவை கலைப் பதற்கான கால அளவை 20 வாரங்களிலிருந்து 28 வாரங் களாக நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
டாக்டர் நிகில் தத்தார் என்பவரும் இதே கருத்தை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நிகிதா மேத்தா என்ற பெண்ணின் வயிற்றில் குறைபாடுகளுடன் இருந்த 24 வார கருவை கலைக்க அனுமதி கேட்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இம்மனுக்கள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.