

பிஹாரில் 9 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கோசி உள்ளிட்ட பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
பிஹாரில் வெள்ளம்
பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் நதிகளையொட்டிய கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் பேரை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 28 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் ரப்தி, காக்ரா, சரயு நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர். 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பஹ்ராய்ச் பகுதியில் உள்ள 250 வீடுகள் சேதமடைந்தன. இங்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
மீட்புப் பணிகளில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம், பிஹார், அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு தொடர்பாக கவலை தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அந்த மாநிலங்களில் உள்ள கட்சியினரை நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி யுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
காஷ்மீரில் பலத்த மழை
காஷ்மீரில் ரசவுரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததில் வீடு இடிந்து பெண் ஒருவர் பலியானார். ஹப்பி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சகோதரிகள் நர்வேஸ் அக்தர், பேகம் அக்தர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை பரவலாக மழை பெய்த போதிலும், வானிலையில் சற்று முன்னேற்றம் காணப் பட்டது.
அருணாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு
அருணாசலப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இதனிடையே, அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம், காஷ்மீர், உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வடக்கு மாநிலங்களிலும் அடுத்த 48 மணிநேரத்துக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.