

தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா இசைக் கச்சேரியை இந்திய விமானநிலைய ஆணையம் தள்ளிவைத்திருந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக இசைப்பாடகர் கிறிஸ்துவப் பாடல்களைப்பாடி இருந்ததால் அவரை சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்தனர் இதனால், டெல்லியில் 17-ம் தேதி நடைபெற இருந்த கச்சேரியை விமான ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்திய விமான ஆணையம், ஸ்பிக் மெக்கே ஆகியவை இணைந்து, 17-ம் தேதி டெல்லியில் இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்திருந்தன. ஆனால், டி.எம். கிருஷ்ணா கிறிஸ்துவப் பாடல்களையும், இஸ்லாமிய பாடல்களையும் பாடியவர் என்று கூறியும், இந்தியாவுக்கு எதிரானவர், அர்பன் நக்சல் என்று கூறி வலது சாரி அமைப்புகளைச் சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் கிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்தனர்.
இதனால், இந்திய விமான ஆணையம் டி.எம். கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாக அறிவித்தது. சில அவசர பணிகள் காரணமாக இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாகவும், பின்னர் தேதி அறிவிக்கப்படுவதாகவும் விமான ஆணையத்தலைவர் குருபிரசாத் மொகாபத்ரா தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலையிட்டு, பாடகர் டி.எம். கிருஷ்ணாவிடம் பேசி, நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் கேட்டது அதற்குக் கிருஷ்ணாவும் சம்மதித்தார்.
எந்த விதமான இடையூறும் இன்றி டெல்லியில் குறித்த தேதியில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்தது. முதலில் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி டெல்லி சாணக்கியபுரியில் நடப்பதாக இருந்தது. இப்போது டெல்லி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான சாகேத்தில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது.
டிஎம் கிருஷ்ணாவுடன், வயலின் இசைக்கலைஞர் ஆர்.கே. ராம்குமார், அனிருத், கஞ்சிரா கலைஞர் ஆத்ரியா, மிருதங்க கலைஞர் பிரவீன் ஸ்பிராஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். நாளை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்று டெல்லி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில், "சாமானிய மக்களின் குரலாக இருக்கும் கர்நாடக இசைப் பாடகரும், மகசேசே விருதுபெற்றவருமான டி.எம். கிருஷ்ணாவின் கச்சேரி நாளை மாலை நடைபெறும். எந்தக் கலைஞரும் தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது. கலை, கலைஞர்களின் மாண்பு காக்கப்படவேண்டும். டெல்லி மக்களுக்காகக் கிருஷ்ணா பாடுவார்"எனத் தெரிவித்தார்.
டி எம் கிருஷ்ணா கூறுகையில், “ ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அரவணைப்பில் இருப்பவர்கள் என்னை ட்ரோல் செய்கிறார்கள்.சமூகத்தில் என்னுடைய செயலுக்காகவும், அரசியல் கருத்துக்களுக்காகவும், பாஜக ஆட்சியில் மீதான அதிருப்திக்காகவும் நீண்ட காலமாகவே நான் சமூகவலைத்தளங்களில் ட்ரால் செய்யப்படுகிறேன். அல்லாஹ், ஏசு, ராமர் ஆகிய எந்தக் கடவுளுக்கும் வேறுபாடு இல்லை. பன்முக மதங்கள், மொழிகள் அடங்கிய நாடு இந்தியா” என்று தெரிவித்தார்.