

இன்னும் இரண்டு நாட்களில் ஜப்பான் செல்லவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய மொழியில் ட்விட்டரில் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இதற்காக மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தையே பயன்படுத்தியுள்ளார். பிரதமருக்கான ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தவில்லை.
ஜப்பானிய மொழியில் மொத்தம் 8 ட்வீட்களை பதிவு செய்துள்ள அவர், அவற்றில் இரண்டில் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவையும் டேக் செய்துள்ளார்.
இது குறித்து ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், "ஜப்பானிய நண்பர்கள் பலர் நான் அந்நாட்டு மக்களுடன் ஜப்பானிய மொழியில் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அதனை ஏற்றே, ஜப்பானிய மொழியில் ட்வீட் செய்துளளேன். மொழியாக்கத்திற்கு உதவியவர்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் மோடியின் ட்விட்டர் ஜப்பானிய மொழியில் ட்வீட் இருந்ததைப் பார்த்த பலரும், அவரது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்களோ என கேள்வி எழுப்பினர். பின்னர், மோடி ஆங்கிலத்தில் அளித்த விளக்க ட்வீட் அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்தது.
பிரச்சாரம் முதல் பிரதமர் வரை:
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி தான் செல்லும் மாநிலத்தின் மொழியில் ஒரு சில வார்த்தைகளாவது பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சென்னையில் பிரச்சாரம் செய்த போது அவர் தமிழில் பேசியது நினைவிருக்கலாம்.
அதேபோல், உடை விஷயத்திலும் மாநில பாரம்பரிய உடைகளை அணிவதை மோடி பலமுறை கடைபிடித்திருக்கிறார். அண்மையில்கூட, காஷ்மீர் மாநிலத்தில் லேஹ் பகுதியில் நலத்திட்டங்களை துவங்கி வைத்தபோது அந்த பகுதிக்கான பாரம்பரிய உடையை அணிந்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.