

தேர்தலுக்காக மட்டுமே ராமர் கோயில் பிரச்சினையை பாஜக எழுப்புகிறது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.
அயோத்தியில் ராமர் கோயிலை விரைவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வருகிறார். அயோத்திக்கு வரும் 25-ம் தேதி அவர் செல்கிறார்.
இதை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சத்ரபதி சிவாஜி மகாராஜா பிறந்த சிவனேரி கோட்டைக்கு நேற்று சென்ற உத்தவ் தாக்கரே, அங்கிருந்து மண்ணைச் சேகரித்துக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
அயோத்திக்கு வரும் 25-ம் தேதி செல்கிறேன். அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதே இந்துக்களின் விருப்பம். அனைத்து இந்துக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக சத்ரபதி சிவாஜி மகாராஜா பிறந்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு அயோத்திக்கு செல்கிறேன்.
இந்த உணர்வு ராமர் கோயில் கட்டும் நடவடிக்கையை விரைவுபடுத்தும். ராமர் கோயில் பிரச்சினையை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் பாஜக எழுப்புகிறது. தேர்தலுக்காக மட்டுமே இந்த விவகாரத்தை பாஜக எழுப்புகிறது. ராமர் கோயில் விரைவில் கட்டுவோம் என்று சொல்லி இன்னும் எத்தனை தேர்தலுக்கு மக்களை முட்டாளாக்க முடியும் என்பதற்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.