

ஷியா வக்ஃபு வாரியத் தலைவர் வசீம் ரிஜ்வி தயாரிப்பில், ‘ராம ஜென்ம பூமி’ என்ற இந்தி திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு உத்தரபிரதேச முஸ்லிம் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருபவர் வசீம் ரிஜ்வி. உ.பி.யின் ஷியா வக்ஃபு வாரியத்தின் தலைவரான இவர், தாம் சொந்தமாக கதை எழுதி ‘ராம ஜென்ம பூமி’ எனும் பெயரில் இந்தி திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.
இதன் டிரெய்லர் காட்சி நேற்று முன்தினம் லக்னோவில் வெளியிடப்பட்டது. இத்திரைப் படம், வரும் டிசம்பரில் நாடு முழுவதிலும் வெளியிடப்படவுள் ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை வெளியிட உ.பி.யின் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கடும் எதிர்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஷியா பிரிவின் முக்கியத் தலைவரான கல்பே ஜாவீத் கூறும்போது, ‘‘முஸ்லிம் களுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டதால் ஷியா முஸ்லிம் சமூகத்தில் இருந்து ரிஜ்வி நீக்கப்பட்டுள்ளார்.
அத்திரைப்பட டிரெய்லர் காட்சிகளே மதக் கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளதால் அதனை வெளியிட அரசு தடை விதிக்க வேண்டும். மேலும், இந்தப் படமானது குறிப்பிட்ட தேசியக் கட்சி ஒன்று பலனடையும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, வசீம் ரிஜ்வியின் திரைப்படத்தை எதிர்த்து ஷியா பிரிவு முஸ்லிம்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட உள்ளது. ஷியாக்களை போல் உ.பி.யில் அதிகம் வசிக்கும் சன்னி முஸ்லிம் பிரிவினரும் ரிஜ்வியின் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து லக்னோவின் அலிஷ்பாக் ஈத்காவின் இமாமான காலீத் ரஷீத் கூறும்போது, ‘‘இந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிக்காஹ் ஹலாலா மற்றும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைகள் பற்றியும் மிகத் தவறான விமர்சனங்கள் இதில் இருப்பதால் இத்திரைப் படத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும்’’ என அவர் தெரிவித் தார்.