

நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையில் நீர் விமானநிலையம் அமைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விமான தளத்தில் இருந்து பறந்து செல்வதைபோலவே, நீரில் இறங்கவும், அங்கிருந்து பறந்து செல்லும் வசதி கொண்ட விமானங்கள் ‘சீபிளேன்’ எனப்படும் நீர்விமானங்கள் ஆகும். இந்த விமானங்கள் வந்து தரையிறங்கும் வகையில் நீரிலேயே விமான தளம் அமைக்கப்பட்டு நீர் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த நீர் விமான நிலையங்கள் பெரும்பாலும் தீவு நாடுகளில் உள்ளன.
குறிப்பாக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் போன்ற உல்லாச தீவுகளில் உள்ளது. கனடாவில் பல்வேறு இடங்களில் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குஜராத்தில் நீர்விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நர்மதை அணைக்கட்டு, வதோதரா நகரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
குஜராத் மாநில சுற்றுலாத்துறை இயக்குநர் எஸ்.ஜே.ஹாய்டர் ''நீர் விமான நிலையம்'' குறித்து பிடிஐயிடம் தெரிவித்ததாவது:
உலகின் பல பகுதிகளில் திறந்தவெளி நீர்ப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. அவ்வகையில் விமானம் புறப்படவும், தரையிறங்கவும் நிலம், நீர் இரண்டிலும் இயங்கக் கூடிய விமானங்களை இயக்கக்கூடிய வகையில் சர்தார் சரோவர் அணையில் விமான நிலையத்தை அமைக்க குஜராத் அரசு முடிவுசெய்துள்ளது.
குஜராத்தில் இதேபோன்ற நீர் விமான நிலையங்கள் மொத்தம் 4 இடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மற்ற மூன்று இடங்கள் சபர்மதி ஆறு, தோரோய் அணைக்கட்டு, சத்ருன்ஜாய் அணைக்கட்டு ஆகியனவாகும்.
இதற்கான முன்முயற்சிப் பணிகள் தொடங்கியுள்ளன. வதோதரா விமான நிலைய இயக்குநர் சரண் சிங், ‘‘தற்போது முன்முயற்சிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்பார்வையிடுவதில் எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். முழுமையான ஆய்வுப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
நீர் விமான நிலையங்கள் மூலம் தொடங்கப்படும் போக்குவரத்து பல்வேறு இடங்களை இணைக்கும் விதமாக அமையும். இப்படி செய்வது சுற்றுலாத் துறைக்கும் ஊக்கமளிக்கவும் மேம்படுத்தவும் உதவும்.
இவ்வாறு ஹாய்டர் தெரிவித்தார்.