

சபரிமலை ஐயப்பயன் கோயிலுக்கு நுழைய முயன்று பரபரப்பு ஏற்படுத்திய பெண்ணியவாதியும், சமூக செயற்பாட்டாளருமான ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக அக்டோபர் 19-ம் தேதியன்று ரெஹானா பாத்திமா சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்து, கோயிலுக்குள் நுழைய முயன்றார். ஆனால், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் கீழே இறக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரெஹானா பாத்திமா சபரிமலையின் மாண்பையும், இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தில் இருந்து கேரள முஸ்லிம் ஜமாத் நீக்கி அறிவித்தது. அதேபோல ரெஹானாவின் ஃபேஸ்புக் பதிவுகள் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, சபரிமலை சம்ரக்ஷனா சமிதி காவல்துறையிடம் புகார் அளித்தது.
இதனால் ரெஹானாவின் மீது பத்தனம்திட்டா காவல் நிலையத்தில் 295 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன் ஜாமீன் கோரி, ரெஹானா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.