Last Updated : 18 Nov, 2018 06:57 PM

 

Published : 18 Nov 2018 06:57 PM
Last Updated : 18 Nov 2018 06:57 PM

ரகுராம் ராஜன் அளித்த பட்டியல்படி கடனை திருப்பிச் செலுத்தாவர்கள் பெயரை வெளியிடுங்கள்: பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவு

வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் பெயரை ரகுராம் ராஜன் அளித்த பட்டியல்படி வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் பட்டியலை அளிக்கக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சந்தீப் சிங் என்பவர் ரிசர்வ் வங்கியிடம் மனு செய்திருந்தார். அதற்கு, முறையான பதில் இல்லாததையடுத்து, அவர் மேல் முறையீடு செய்தார்.

வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு ரிசர்வ வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும், கடனைத் திருப்பிச் செலுத்த பெரும் தொழிலதிபர்கள் பட்டியல் குறித்த கடிதத்தைப் பிரதமர் அலுவலகத்திடம் அளித்தார்.

அந்தக் கடிதத்தில் உள்ளவர்கள்  பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதை வெளியிடக் கோரி ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டும் அவர் வெளியிடவில்லை. இதனால், உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய தகவல் ஆணையம் எச்சரித்தது.

இந்நிலையில் மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு 66 பக்கங்களில் பிரதமர் அலுவலகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கடன் கட்டாதவர்கள் பெயர்களை வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய தகவல் ஆணையர் ஆச்சார்யலு கூறியதாவது:

''முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பட்டியலின்படி கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிடுவதில் பிரதமர் அலுவகக்துக்கு  ஏதேனும் விதிவிலக்கு, மறுப்பு இருந்தால் அதைக் கோரிக்கையாக வைத்தால் அது நியாயமானதா எனப் பரிசீலிக்கலாம்.

வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாவர்கள் பட்டியல் குறித்து ரகுராம் ராஜன் அளித்தபோதிலும் பிரதமர் அலுவலகம் வெளியிடவில்லை என்பது சட்டப்பூர்வமானதல்ல, அது துரதிஷ்டவசமானது.

கடனைப் பெற்று வங்கிக்கு முறையாக திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் யார் என்பது குறித்த பட்டியலையும், அவர்களிடம் இருந்து கடனை மீட்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய தார்மீக, அரசியல்ரீதியான பொறுப்புகள் பிரதமர் அலுவலகத்துக்கு இருக்கின்றன.

ஜெயந்திலால் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடனை திருப்பிச் செலுத்தாவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். அவ்வாறு செயல்படாமல் இருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். ஆர்பிஐ சட்டத்தையும் மீறி ரிசர்வ் வங்கி செயல்படுவதாகும்''.

இவ்வாறு ஆச்சார்யலு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x