‘‘பிரதமரிடம் விவசாயிகள் கேட்பது அன்பளிப்பல்ல; உரிமை’’ - டெல்லி பேரணியில் ராகுல் காந்தி விளாசல்

‘‘பிரதமரிடம் விவசாயிகள் கேட்பது அன்பளிப்பல்ல; உரிமை’’ - டெல்லி பேரணியில் ராகுல் காந்தி விளாசல்
Updated on
1 min read

பிரதமர் மோடியிடம் இருந்து விவசாயிகள் அன்பளிப்பை எதிர்பார்க்கவில்லை, தங்கள் உரிமையை தான் எதிர்பார்க்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.

விவசாயக் கடன் தள்ளுபடி , உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப்போவதாக அனைத்து இந்திய விவசாயிகள் ஒத்துழைப்பு குழு ஆகியவை அறிவித்தது. இதில் 207 விவசாய அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

அதன்படி, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கூடினார்கள்.

தமிழகத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். ராம்லீலா மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி புறப்பட்டனர்.  விவசாயிகள் பேரணிக்கு சீக்கிய குருதுவாராக்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்றம் செல்லும் முன்பாக பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே விவசாயிகள் ஆர்ப்பட்டம் நடத்தினர்.

அப்போது பல்வேறு கட்சித் தலைவர்களும் அங்கு வந்து ஆதரவு தெரிவித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.

இதில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவை வெறும் வெற்று வாக்குறுதிகள். எதுவுமே நடக்கவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் உரிமை. அவர்கள் அதனை அன்பளிப்பாக கோரவில்லை.

கார்பபேரட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கும் மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன். அனில் அம்பானியிடம் இருந்து அவர்கள் விமானங்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கான உரிமைக்காகவே போராடுகிறார்கள்.

விவசாயிகளின் எதிர்காலம் வளம்பெற நாங்கள் துணையாக இருப்போம். விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த அரசை அவர்கள் தூக்கியெறிவார்கள். விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்தாக வேண்டும். விவசாயிகளின் சக்தியால்தான் இந்த தேசம் உருவாகியுள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in