Published : 26 Nov 2018 04:33 PM
Last Updated : 26 Nov 2018 04:33 PM

நார்த் சென்டினல் தீவில் எத்தனைப் பழங்குடியினர் வசிக்கிறார்கள்?– அங்கு சென்றுவந்த மானுடவியலாளர் சொல்வது என்ன?

அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே இருக்கும் நார்த் சென்டினல் தீவில் சென்டினல்ஸ் பழங்குடியினர் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது குறித்து 1967-ம் ஆண்டு அங்கு சென்று வந்த மானுடவியலாளர் டி.என் பண்டிட் சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

நார்த் சென்டினல் தீவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை

இந்த தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்குச் செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 

அமெரிக்கர் கொலை

இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) மீனவர்கள் உதவியுடன் நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றார். முதலில் ஜான் ஆலனை ஏதும் செய்யாமல் இருந்த அந்தப் பழங்குடியினர், பின்னர் அம்பு எய்திக் கொலை செய்து, அங்கேயே புதைத்துவிட்டனர் என மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மீட்பதில் சிக்கல்

இந்நிலையில் அந்தத் தீவுக்கு போலீஸார், கடற்படையினர் உள்ளிட்ட ஒருவரும் செல்ல அச்சப்படும் சூழலில் அமெரிக்கர் ஜான் ஆலன் உடலை மீட்பது பெரும் சவாலாக உள்ளது. நார்த் சென்டினல் தீவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன், அமெரிக்கர் உடலை மீட்கச் சென்ற கடற்படையினரை நோக்கி சென்டினல் பழங்குடிமக்கள் வில் அம்பு மூலம் குறிவைத்ததால், அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள்.

தனியாக விடுங்கள்

இந்நிலையில், சென்டினல் பழங்குடிமக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அமெரிக்கர் உடலை மீட்க வேண்டும் என்று ஒருபிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், சென்டினல் பழங்குடி மக்களை தனியாக விடுங்கள், தொந்தரவு செய்யாதீர்கள் என்ற தலைப்பில் ‘தி இந்து’ (ஆங்கிலம்) தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அந்தமான் நிகோபர் தீவில் உள்ள நார்த் சென்டினல் தீவுக்கு சென்று உயிரிழந்த இளம் அமெரிக்கர் பேசுபொருளாக மாறி இருக்கிறார். சென்டினல் மக்களைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள், சிலரோ நவீன நாகரீக உலகிற்கு அழைத்துவர வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், இரு கோரிக்கைகளும் தவறானவை, சென்டினல் மக்களை அங்கேயே விட்டுவதுவதுதான் சிறந்தது.

 அமெரிக்க இளைஞர் ஜான் சாவோவின் மரணம் சோகமானதுதான். ஆனால், அவர் சென்டினல் பழங்குடி மக்களை அணுகமுயற்சி செய்த செயல் ஆபத்தானது. அது அவருக்கு மட்டுமல்ல, அந்த பூர்வகுடிகளுக்கும் ஆபத்தானது.

நார்த் சென்டினல் தீவுக்கு தொண்டு நிறுவனங்கள், படித்தவர்கள், சாகசசெயல்கள் புரிபவர்கள், அமெரிக்கர்கள், அல்லது இந்தியர்கள் யாரும் சாகச செயல் செய்ய அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. மிகவும் அரிதான சூழலில்தான் நார்த் சென்டினல் தீவுக்கு அருகே செல்ல முன்னெச்சரிக்கையுடன் அனுமதிக்கப்படுவார்கள். மற்றவகையில் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.

வங்கக்கடலில் தனியாக ஒரு தீவில் சென்டினல் பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு வெளிஉலகில் இருக்கும் நோயை எதிர்க்கும் அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது, தாங்கக்கூடிய சக்தி இருக்காது.

அந்த தீவுக்குள்ளே வாழ்ந்தவர்கள் என்பதால், அவர்களால் வெளியுலக வாழ்க்கைக்கு உடல்ஒத்துழைக்காது. நம்மைப் போன்றவர்கள் உள்ளே சென்றாலோ அல்லது அவர்களுடன் தொடர்புவைத்தாலோ தொற்றுநோய் பரவும் ஆபத்து இருக்கும்.அதனால், எந்தவிதமான வேட்டையாடுபவர்களும் அங்கு செல்ல மத்திய அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

உலகிலேயே மிகவும் தனிமையான சமூகமாக நார்த் சென்டினல் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பேசும் மொழியை யாராலும் புரிந்து கொள்ள முடியாது, பரம்பரையாக அவர்கள் தங்கள் வாழ்விடங்களை பாதுகாத்து வருகிறார்கள், யாராவது உள்ளே நுழைய முற்பட்டால், பழங்கால வில் அம்புகளுடன் தாக்குதல் நடத்துகிறார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலின்போது அந்தத் தீவில் மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று பார்க்கச் சென்ற இந்திய அரசு விமானத்தின் மீது அம்புகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

2011 கணக்கெடுப்பு

அமெரிக்கர் ஜான் சட்டத்தை மீறி 7 மீனவர்கள் துணையுடன் அங்குச் சென்றுள்ளார். ஆதலால், அந்தசென்டினல் தீவின் பாரம்பரியம், பழமை ஆகியவற்றை ஆராயாமல் அங்குச் சென்று விசாரணை செய்யக்கூடாது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது. சென்டினல் மக்களை இதுவரை சந்தித்த ஒரே நபர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். கடந்த 1960களில் அங்குச் சென்றுவந்துள்ளார். அப்போது 90பழங்குடிவரை வாழ்ந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன். பண்டிட்

panditjpgடி.என். பண்டிட்100 

நார்த் சென்டினல் தீவுக்குள் வெற்றிகரமாகத் தனது குழுவினர் 20 பேருடன் சென்றுவந்தவர் மானுடவியலாளர் டி.என். பண்டிட். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. அவர் சென்டினல் பழங்குடிகள் குறித்துக் கூறியதாவது:

அந்தமானில் உள்ள இந்திய மானுவியல்துறையில் பணியில் இருந்தபோது கடந்த 1967-ம் ஆண்டு 20 பேர் கொண்ட குழுவாக நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றோம்.

நாங்கள் சென்றநேரம் யாரும் இல்லை என்பதால், காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் வரை நடந்தோம். அங்கு 18 குடிசைகள் வரை கட்டப்பட்டு இருந்தன. ஒரு குடிசையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. யாரே சிலர் சமையல் செய்து கொண்டிருந்து.

 மீன்களும், மாமிசத்தையும் தீயில் வாட்டிக்கொண்டிருந்தனர். பழங்களும் அந்த வீட்டில் இருந்தன. அவர்கள் எந்த உடையும் அணியவில்லை, இலைகளையும், மரத்தின் குச்சிகளையும் கோர்த்து ஆடைகளாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், நாங்கள் இருந்த ஒருமணிநேரத்தில் யாரையும் சந்தித்துப் பேசவில்லை.

 ஆனால், நார்த் சென்டினல் மக்கள் வருவதை அறிந்து நாங்கள் மீண்டும் படகில் ஏறிக்கொண்டு, அவர்களின் அம்பு வராத தொலைவுக்கு நின்று கொண்டு, தேங்காய்களையும், சில சமையல் பாத்திரங்களையும் தூக்கிவீசினோம். அவர்களுடைய மொழி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதைப் புரிந்துகொள்ள முடியாது. நான் பார்த்தவரை 90 வரை பேர் வாழ்ந்திருப்பார்கள். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்டினல் மக்கள் 15 பேர் வரை மட்டும் வாழ்வதாகக் கூறப்படுகிறது

சென்டினல் பழங்குடிமக்களைப் பொறுத்தவரை வெளியில் இருந்து வருபவர்கள் யாரையும் கைதிகளாகப் பிடிப்பதில்லை. தங்கள் பகுதிக்குள் வரும் மக்களை எச்சரிக்கிறார்கள், யாரையும் கொல்வதில்லை. யாருடைய இடத்தையும் ஆக்கிரமிப்பதில்லை. அவர்கள் கேட்பதில்லொம் “ எங்களைத் தனியாக விடுங்கள்” என்பது மட்டும்தான். வெளிஉலக மக்களின் வருகையை அவர்கள் சிறிதுகூட விரும்பவில்லை .

இவ்வாறு பண்டிட் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x