Last Updated : 30 Nov, 2018 10:50 AM

 

Published : 30 Nov 2018 10:50 AM
Last Updated : 30 Nov 2018 10:50 AM

நீதித்துறை தனது கம்பீரம், பிரகாசத்தை இழந்து வருகிறது: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை

நீதித்துறை தனது கம்பீரம், ஒளியை இழந்து வருகிறது, இளம் வழக்கறிஞர்கள் நீதிபதி பதவிக்கு வர விருப்பம் இல்லாமல் உள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி குரியன் ஜோஸப் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் அமைப்பு சார்பில் பிரிவு உபசார விழா நேற்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வு பெறும் நீதிபதி குரியன் ஜோஸப்பின் பணிகளைப் பாராட்டினார்.

அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசுகையில், “மிகச்சிறந்த நீதிபதி குரியன் ஜோஸப். அவரின் இடத்தை நீதிமன்றத்தில் நிரப்புவது அவசியமாகும். அதேசமயம், இவரைப் போன்றவர்களை தேடிக் கண்டுபிடித்து நிரப்புவது நீதிபதிகள் கொண்ட கொலிஜியத்துக்கு கடினமான பணி. இன்றுள்ள சூழலில் வழக்கறிஞர்கள் அனுபவம் வாய்ந்த பின் நீதிபதிகளாக வர விருப்பம் இல்லாதவர்களாக உள்ளனர்.

நீதித்துறையின் கம்பீரமும், பிரகாசமும் மெல்லக் குறைந்து வருவது ஒரு காரணமாகும். ஆனால், நீதித்துறையின் கம்பீரமும், பிரகாசமும் இளம் வழக்கறிஞர்களை ஈர்க்க வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து, கடினமாக உழைக்க முன்வர வேண்டும். அதற்கு பார் கவுன்சில் அமைப்பு உதவி செய்து, இளம் வழக்கறிஞர்களை ஊக்கப்படுத்தி, நீதித்துறையில் பணிபுரிய வைக்க வேண்டும்.

நானும், குரியன் ஜோஸப்பும் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளோம். நான் அசாம் மாநிலத்தில் இருந்தும், குரியன் கேரள மாநிலத்தில் இருந்தும் வந்தோம். ஆனால், 6 ஆண்டுகள் வலிமையான புரிதலோடு இணைந்து பணியாற்றினோம்''.

இவ்வாறு ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

நீதிபதி குரியன் ஜோஸப் கூறுகையில், ''இரக்கம் நீதிமன்றங்கள் மூலம் வரலாம். ஆனால், நீதிபதி சட்டத்தின்படியே நடக்க வேண்டும். அதுதான் கடமையாகும். ஏராளமான பொதுநலன் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. என்னைப் பொறுத்தவரை அவை நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றன.

நான் நீதிபதியாகப் பதவிக்கு தேர்வானவுடன் என் மனைவி என்னிடம் முட்கள் நிறைந்த கிரீடத்தை தலையில் சூடுகிறீர்கள் என்று எச்சரித்தார். ஆனால், நான் அவரிடம், என்னால் ரோஜாக்கள் நிறைந்த கிரீடமாக மாற்ற முடியும். பூக்கள் நிறைந்த கிரீடமாக மாற்ற முடியும். நான் முயற்சிப்பேன் என்று தெரிவித்தேன். நான் பணியாற்றிய காலம் வரை, நான் பதவியேற்ற உறுதிமொழிக்கு ஏற்க உண்மையாகவே நடந்தேன்'' எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x