Last Updated : 09 Nov, 2018 08:39 AM

 

Published : 09 Nov 2018 08:39 AM
Last Updated : 09 Nov 2018 08:39 AM

நிதி மோசடி வழக்கில் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் போலீஸ் சோதனை: கைது செய்ய 4 தனிப்படை அமைப்பு

அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 20 கோடி லஞ்சம் கொடுப்பதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் பெல்லாரி வீட்டில் பெங்களூரு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

சையத் அகமது ஃப்ரீத் என்பவர் ஆம்பிடெண்ட் என்ற நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 600 கோடி வரை மோசடி செய்துள்ளதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் சையத் அகமது ஃப்ரீதை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, கர்நாடக பாஜக‌ முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான‌ ஜனார்த்தன ரெட்டி அவருடன் நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அதாவது ஜனார்த்தன ரெட்டி தனக்கு மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் சையத் அகமது ஃப்ரீத் மீதான வழக்குகளைச் சாதகமாக்க முடியும். அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சையத் அகமது ஃப்ரீத்திடம் ரூ. 21 கோடி பெற்றுள்ளார். அதில் ரூ.3 கோடி ரொக்கமாகவும், ரூ.18 கோடி மதிப்புள்ள 57 கிலோ தங்கத்தையும் பெற்றதாக போலீஸாரிடம் சையத் அகமது ஃப்ரீத் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய தேடி வருகின்றனர். துணை ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் 4 படைகள் அமைத்து பெங்களூரு, பெல்லாரி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி தனது வழக்கறிஞர் மூலம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் நேற்று பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவரது உறவின‌ர் ராமச்சந்திர ரெட்டி மட்டுமே இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தினர். இதே போல ஆகூம்பே பகுதியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகத்திலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜனார்த்தன ரெட்டியை மீண்டும் கைது செய்ய போலீஸார் தேடி வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x