Published : 07 Aug 2014 02:52 PM
Last Updated : 07 Aug 2014 02:52 PM

திட்டமிட்டபடி ஆக.24-ல் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: மத்திய அரசு

யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

யூபிஎஸ்சி தேர்வு சர்ச்சை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, "நடப்பு ஆண்டில் முதல்நிலைத் தேர்வு தேதியில் மாற்றம் ஏற்படுத்த சாத்தியம் இல்லை. யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ல் நடைபெறும். இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகளுடனும், தேர்வு வாரியத்தினருடனும் ஆழமான ஆலோசனை நடத்துவது அவசியமாக இருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப் பின்னர் இது குறித்த ஆலோசனைக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. இப்போதைக்கு, அரசு எடுத்துள்ள முடிவே மிகச் சரியானது. தேவையில்லாமல் மாணவர்கள் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தக் கூடாது என்றார்.

முன்னதாக மாநிலங்களவையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், யூபிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.

இதேபோல் மக்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை, யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வையும் அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய பணியாளர் தேர்வாணை யம் (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில், ஆங்கில திறனறித் தேர்வு கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு சாதகமான நடவடிக்கை என்றும், இந்தி அல்லது பிராந்திய மொழிகளை கல்வி கற்பதற்கான பயிற்றுமொழியாக கொண்ட மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் புகார் எழுந்தது. ஆங்கில திறனறித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான முக்கிய அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டது. அதில், சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டாம் தாளில் இடம்பெற்றுள்ள ஆங்கில மொழி திறனறிதல் தொடர்பான மதிப் பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அடுத்த கட்டத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பீட்டுக்கு அந்த மதிப்பெண்கள் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x