

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.89-ல் இருந்து ரூ.2.38 வரை குறைக்கப்படுகிறது என்றும், இந்த மாற்றம் ஆகஸ்ட் 14/15 நள்ளிரவு முதல் அமலாகும் என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இது தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், "ஆகஸ்ட் 14/15 நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.89 - 2.38 வரை (டெல்லியில் ரூ.2.18) குறைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பான தனது கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. அப்போதிருந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில், முதல் முறையாக பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
அதேவேளையில், டீசல் விலை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பெட்ரோல் விலையில் உயர்வும் குறைப்பும் இருந்தாலும், மாதந்தோறும் டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் சந்தை நிலவரங்கள் சாதகமாக உள்ளதால், சுதந்திர தினத்தின்போது பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் பி.அசோக் கூறும்போது, “சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை 2 வாரங்களுக்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி லிட்டருக்கு ரூ.1.09 விலை குறைக்கப்பட்டது.
மீண்டும் பெட்ரோல் விலை குறித்து வரும் 15-ம் தேதி ஆய்வு செய்யவுள்ளோம். விலையை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எவ்வளவு ரூபாய் குறைக்கப்படும் என்பதை வரும் 15-ம் தேதி இரவுதான் முடிவு செய்வோம்" என்றது குறிப்பிடத்தக்கது.