Last Updated : 28 Nov, 2018 04:02 PM

 

Published : 28 Nov 2018 04:02 PM
Last Updated : 28 Nov 2018 04:02 PM

பாஜகவை மீண்டும் வெற்றி பெற வைக்கவே ராமர் கோயில் விவகாரம்: விஎச்பியை விமர்சித்து தலைமை அர்ச்சகர் ஆவேச பேச்சு

மக்களை முட்டாளாக்குவதற்காகவே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயில் விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறது. உண்மையில் அதன் நோக்கம், பாஜகவை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்பதுதான் என்று ராம ஜென்மபூமி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 25-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் அயோத்தியில் தர்ம சபா கூட்டம் நடந்தது. ராமர் கோயில் கட்ட மத்திய அரசை வலியுறுத்தி இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ராம பக்தர்கள், இந்து அமைப்பினர், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்தக் கூட்டம் குறித்தும் விஎச்பியின் நோக்கம் குறித்தும் ராம ஜென்மபூமி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஆவேசமாகப் பேசியுள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு ராமஜென்மபூமியில் பால ராமர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டதில் இருந்து இங்கு அர்ச்சகராக சத்யேந்திர தாஸ் இருந்து வருகிறார்.

முதலில் ஹனுமன்கார்கி கோயிலின் அர்ச்சகராக இருந்த நிலையில் அரசால் நியமிக்கப்பட்டவர். சமஸ்கிருதத்தில் 3 பட்டங்கள் பெற்று அயோத்தி பல்கலையில் பேராசிரியராக இருந்தவர். விஎச்பியின் கூட்டம் குறித்து ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது:

ராமர் கோயிலுக்காக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய கூட்டம் அனைத்தும் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பதற்காகத்தான். வேறு எந்த நோக்கத்துக்காகவும் தர்ம சபா கூட்டம் நடக்கவில்லை.

விஎச்பி அமைப்பு அரசியல் நோக்கத்துக்காகத் தர்ம சபா கூட்டத்தை நடத்தியது. அயோத்தியில் ராமர் கோயில் எழுப்ப வேண்டும் என்ற தீவிர நோக்கம் கொண்டவன் நான், ஆனால், நான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தர்ம சபா கூட்டத்தின் மூலம் விஎச்பி தன்னை வலிமையுள்ள அமைப்பாகவும், தகுதியுள்ள அமைப்பாகவும் மக்களிடத்தில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. இந்த தர்ம சபா கூட்டத்தின் முடிவு, விளைவு என்ன? ராமர் கோயில் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது, எந்தவிதமான புதிய கட்டுமானமும் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்ட முடியாது.

நான் விஎச்பி அமைப்பினருக்குச் சவால் விடுகிறேன், உங்களின் மிரட்டல் உண்மையாக இருந்தால், உங்களால் முடிந்தால், நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு செங்கல்லை எடுத்து, சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்க முடியுமா?

விஎச்பி அமைப்பு இந்துக்களையும், ராம பக்தர்களையும் ஏமாற்றி, பாஜகவுக்கு உதவ முயற்சிக்கிறது. ராமர் கோயிலுக்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய்களை விஎச்பி அமைப்பினர் சுருட்டி வருகிறார்கள்.

முதலில் விஎச்பி அமைப்பினர் ராம ஜென்மபூமி கோயில் எனத் தொடங்கினார்கள், பின் அந்த விவகாரத்தில் இருந்து மக்களைத் திசை திருப்பி அயோத்தி, வாரணாசி, மதுராவில் 3 கோயில்கள் எழுப்பப்போவதாகப் பேசினார்கள். அதன்பின் கோயில்களை இடித்துவிட்டு 3 ஆயிரம் மசூதிகள் கட்டியுள்ளார்கள் என்று பேசினார்கள்.

அயோத்தியில் எப்படி கோயில் கட்டப்போகிறார்கள் என்பதற்கான வழி எனக்குத் தெரியவில்லை. அயோத்தி விவகாரத்தில் எப்படி முடிவு எடுப்பது, தீர்ப்பது எனத் தெரியாமல் உச்ச நீதிமன்றம் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறதா என்பதும் எனக்குத் தெரியாது.

அதேசமயம், வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அவசரச்சட்டம் கொண்டுவந்து, ராமர் கோயில் கட்டும் திட்டத்தை பாஜக வேகப்படுத்தும் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்தால் சிறப்பானதாக இருக்கும்.

ஒருவேளை பாஜகவினர் அவ்வாறு செய்யாவிட்டால், ராம பக்தர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அர்த்தம். ராமர் கோயில் கட்டப்படும் என்பது கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. ஆதலால் அதற்கு முன்னுரிமை அளிப்பார்கள்.

அயோத்தியின் பக்கம் விஎச்பி திடீரென தனது கவனத்தை திருப்பி இருப்பது, உ.பி முதல்வர் ஆதித்யநாத் சரயு நதிக்கரையில் 221 அடியில் ராமருக்குச் சிலை வைக்கப்போவதாகத் தெரிவித்திருப்பது, பைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா என மாற்றியது என அனைத்தும் ராம பக்தர்களை ஏமாற்றி, 2019-ம் ஆண்டு பாஜகவை ஆட்சியில் அமரவைக்கும் முயற்சிதான். ராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதியை மட்டும் வழங்கமாட்டார்கள்.

இவ்வாறு சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை விஎச்பி நடத்திய தர்ம சபா கூட்டத்தின் போது, அன்று ஒருநாள் மட்டும் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலுக்கு 67 ஆயிரம் பேர் வந்து தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x