Last Updated : 13 Nov, 2018 06:07 PM

 

Published : 13 Nov 2018 06:07 PM
Last Updated : 13 Nov 2018 06:07 PM

குஜராத் கலவரம்: பிரதமர் மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடி அறிக்கை: மறுஆய்வு செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு(எஸ்ஐடி) அப்போது முதல்வராக இருந்த மோடி குற்றமற்றவர் என்று நற்சான்று அளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. வரும் 19-ம் தேதி விசாரணை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, எஸ்ஐடி அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார், அதை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேகவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினார்கள். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது.

அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாகியா ஜாப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு(எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

அந்தச் சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என அறிக்கையில் தெரிவித்தது.

 

இதைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத், குடிமக்களின் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பு ஆகியோர் சார்பில் எஸ்ஐடி அறிக்கையை எதிர்த்தும், எஸ்ஐடி அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரியும் அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ஜாகியா ஜாப்ரி. ஆனால், உயர் நீதிமன்றமும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து, எஸ்ஐடி அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் குஜராத் கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு மோடி உள்ளிட்ட பலர் குற்றமற்றவர்கள் என சான்று அளித்துத் தாக்கல்செய்த அறிக்கையை மீண்டும் ஆய்வு அவசியம் இருக்கிறது. ஆதலால், இந்த மனு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x