ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு அதிகாரிகளை விசாரிக்க முன்அனுமதி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு அதிகாரிகளை விசாரிக்க முன்அனுமதி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஊழல் ஒழிப்புச் சட்டம் 17(ஏ) உள்பட 3 பிரிவுகளில் அரசு செய்துள்ள திருத்தத்தில், அரசு ஊழியர் ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால், அவர்களை விசாரிக்க அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், “ அரசு ஊழியர் ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால், அவர்களை விசாரிக்க அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது அவர்களைக் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் வழிமுறையாகும். இதுபோல் 3-வது முறையாகத் திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மீது போலீஸாரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகும். ஆதலால், இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இன்றைய நவீன உலகில் லஞ்சம் பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது. பணமா, பொருட்களாக, பினாமி சொத்துக்களாக, வெளிநாட்டுச் சொத்துக்களாக என பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களிலும் பதவி உயர்வுக்காகவும், இடமாறுதல் போன்றவற்றுக்காகவும் லஞ்சம் வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில் ஊழலை வேருடன் ஒழிக்க லஞ்ச ஒழிப்புச்சட்டத்தை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக்கூடாது ” என்று தெரிவித்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in