

சிண்டிகேட் வங்கி தலைமை நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், பூஷண் ஸ்டீல் நிறுவன துணைத் தலைவர் நீரஜ் சிங்கால் சிபிஐ அதிகாரிகளால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வங்கி விதிமுறைகளை மீறி சில நிறுவனங்களின் கடன் பெறும் வரம்பை உயர்த்தியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
6 பேர் கைது
இதில் சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே. ஜெயின் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், சோதனையின் போது வீட்டிலிருந்து தலைமறைவானார் நீரஜ் சிங்கால். அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.
இதற்கிடையே, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சிங்கால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி ஸ்வர்ணகாந்த சர்மா நிராகரித்தார். இதன்பின் சிங்கால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வங்கி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.