

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ஹரியாணாவில் திட்டமிட்டு திட்டங்கள் அனைத்தும் காலதாமதம் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் குந்தி - மானேசர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை இன்று அவர் நாட்டுக்கு அர்பணித்தார். மேலும், பல்லப்ஹர் - மூஜேசர் மெட்ரோ ரயில் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘ஹரியாணா மாநிலம் ஒருங்கிணந்த வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. குந்தி - மனேசர் 135 கிலோ மீட்ட்ர எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் முடிந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. இரண்டு கேள்விகளை இது முன் வைக்கிறது. ஒன்று ஒரு அரசு எவ்வளவு வேகமாக செயல்பட்டு இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறது. மற்றொன்று முந்தைய அரசு ஒரு திட்டத்தை எவ்வாறு முடக்கி வைத்திருந்தது என்பதாகும்.
8 ஆண்டுகளில் முடிவடைய வேண்டிய இந்த திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறுகிறது. இதனால் ரூ. 1,200 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதுடன் உரிய காலத்தில் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். 2010- காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக இந்த சாலையை திறக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் போட்டிகள் தொடங்கும் வரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகே பணிகள் வேகமெடுத்து தற்போது முடிக்கப்பட்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஹரியாணாவில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. திட்டமிட்டு காலதாமதம் செய்தது’’ என பிரதமர் மோடி பேசினார்.