Last Updated : 08 Nov, 2018 03:55 PM

 

Published : 08 Nov 2018 03:55 PM
Last Updated : 08 Nov 2018 03:55 PM

‘நிரவ்மோடி அறிவிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி’: குஜராத் நீதிமன்றம் அறிவிப்பு

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்றுத் தலைமறைவாக இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடி, ரூ.52 கோடி சுங்கவரி ஏய்ப்பு செய்த வழக்கில் அறிவிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி என்று குஜராத் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

சுங்கவரி செலுத்தாதது தொடர்பாகக் கடந்த மார்ச் மாதம் சுங்கவரித்துறை தொடர்ந்த வழக்கில் நீரவ் மோடி தொடர்ந்து ஆஜராக மறுத்ததால், இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஐசிபி பிரிவு 82-ன்படி இந்த வழக்கில் நீரவ் மோடி முன்ஜாமீன் பெறுவதைத் தடுக்கும்வகையில், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் வெளிவரும் அனைத்து நாளேடுகளிலும் நிரவ்மோடி அறிவிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி என அறிவிக்க அரசுக்கும், இரு மாநில போலீஸ் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பல்வேறு நாடுகளில் இருந்து பட்டை தீட்டப்படாத வைரங்களை இறக்குமதி செய்துள்ளார் நீரவ் மோடி. அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொண்ட நீரவ் மோடி வைரங்களை ஏற்றுமதி செய்து பல்வேறு சலுகைகளை பெற்று வந்துள்ளார்.

நீரவ் மோடிக்குச் சொந்தமான பயர்ஸ்டார் டைமண்ட் இன்டர்நேஷனல், நிறுவனம், ராடாஷிர் ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் பெயரில் வெளிநாடுகளில் இருந்து வைரங்களை இறக்குமதி செய்ததில் சுங்கத்துறையினருக்கு ரூ.52 கோடி வரிப்பாக்கி இருந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று நீரவ் மோடி பிப்ரவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அதன்பின், சுங்கவரி பாக்கி செலுத்தாதது தொடர்பாக நீரவ் மோடி மீது சூரத் முதன்மை ஜூடிசியல் நீதிமன்றத்தில் சுங்கத்துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகக் கோரி பலமுறை நிரவ்மோடிக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி நீதிமன்றம் நிரவ்மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.

ஆனால், நீரவ் மோடி இருக்கும் இடம் சுங்கத்துறையினரால் கண்டுபிடிக்க முடியாததையடுத்து, கைது வாரண்ட் செயல் இழந்தது. இதையடுத்து, சுங்கத்துறை துணை ஆணையர் ஆர்.கே. திவாரி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதியமனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிரவ்மோடியின் அலுவலகம், வீடு, நிறுவனம் அனைத்திலும் சோதனையிட்டதில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தலைமறைவாக இருக்கிறார். ஆதலால், நிரவ்மோடியை அறிவிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி என பிரகடனப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.எச். கபாடியா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, கபாடியா பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாக இருக்கும்முக்கியக் குற்றவாளி நீரவ் மோடி, இவர் மீது ரூ.52 கோடி சுங்கவரி செலுத்தாததாக சுங்கத்துறையினர் குற்றச்சாட்டுக் கூறியுள்ளனர். அவர் ஆஜராகப் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை, கைது வாரண்ட் பிறக்கப்பட்டும் பயனில்லை. ஆதலால், நிரவ்மோடியை அறிவிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கிறேன். நீரவ் மோடி குறித்து அனைத்துக் காவல் நிலையத்துக்கும் அறிவித்து, அரசுக்கும் தெரிவித்து, ஐசிபி பிரிவு 82-ன்படி நாளேடுகளில் விளம்பரம் செய்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x