சேலம், கோவை நகர எரிவாயு திட்டம்; குழாய் மூலம் சமையல் காஸ்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

சேலம், கோவை நகர எரிவாயு திட்டம்; குழாய் மூலம் சமையல் காஸ்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
Updated on
1 min read

குழாய் மூலம் நேரடியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல் உட்பட, நாடுமுழுவதும் 122 மாவட்டங்களில் நகர எரிவாயு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் சேலம் மற்றும் கோவை நகரங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையவுள்ளன.

சமையல் எரிவாயுவை நேரடியாக குழாய் மூலம் சமையல் அறைக்கே கொண்டு செல்லும் திட்டம் சில நகரங்களில் மட்டுமே தற்போது செயல்படுத்தப்படுகிறது. நாடுமுழுவதும் 18 மாநிலங்களில் 122 மாவட்டங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதால் எரிசக்திக்கான தேவையும் உயர்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தியை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிசக்தி தயாரிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக வாகனங்களுக்கு மட்டுமின்றி சமையல் எரிவாயும் குழாய் மூலம் நேரடியாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு வரை 66 மாவட்டங்களில் மட்டும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 174 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 400 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார். உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் இது மிக முக்கியமான திட்டம்.

சமையல் எரிவாயு தற்போது 32 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மொத்தம் 2 கோடி வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்க முடியும்.  இதுமட்டுமின்றி வாகனங்களுக்கு காஸ் வழங்கும் நிலையங்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நகர எரிவாயு திட்டம் தமிழகத்தில்  காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் செயல்படுத்தபடவுள்ளது. முதல்கட்டமாக சேலம், கோவை நகரங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in