

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்கவைத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், பாஜகவுக்கும் தாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பேசியுள்ளார்.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க தீவிரமாக முயன்று வருகிறது. அதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகிறது. அதேசமயம், பாஜகவும் இங்கு ஆட்சியைப் பிடிக்கும் வகையில் மிசோ தேசிய முன்னணி கட்சியுடன் இணக்கமாகச் சென்றுவருகிறது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சம்பை நகரில் முதல்முறையாக இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
மிசோரத்தில் நுழைவதற்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஒன்றுதான் சரியான வாய்ப்பு, அங்குள்ள கலாச்சாரத்தை அழிக்கவும் இதுதான் சந்தர்ப்பம் என ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் புரிந்துள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றபெறமாட்டோம் என்று பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தெரிந்துவிட்டது.
மிசோரம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெல்ல முடியாது என அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அதனால்தான் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாநிலங்களில் கவர்னர்களாகவும், சிபிஐ அமைப்பிலும், ரிசர்வ் வங்கியிலும், தேர்தல் ஆணையத்திலும் நியமித்து ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களின் எண்ணம் என்பது, தாங்கள் தேர்தலில் தோற்றாலும், அவர்கள் நியமித்த ஆட்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதாகும்.
பல்வேறுபட்ட மொழி, மக்கள் இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமையை காங்கிரஸ் நம்புகிறது. ஆனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாடுமுழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் சிந்தாந்தத்தை திணிக்க முயல்கின்றன. பல்வேறுபட்ட கலாச்சார, மொழிகள் சார்ந்த மக்களை பிரிக்க அவர்கள் முயல்கிறார்கள்.
அதனால்தான், மாநிலத்தில் உள்ள எம்என்எப் கட்சியுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்கும் முயற்சியில் பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், எம்என்எப் போன்ற ஒரு கட்சி பாஜகவுக்கு உதவுவது வருத்தமாக இருக்கிறது. மிசாரம் மாநிலத்தின் கலாச்சாரம், வரலாறு, மொழி, பாரம்பரியத்தை ஆர்எஸ்எஸ் அழிக்க முயற்சித்து வருகிறது. அவர்களிடம் இருந்து காங்கிரஸ் கட்சி மட்டும் தொடர்ந்து போராடி வருகிறது.
பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ரூ.30 ஆயிரம் கோடியை ரஃபேர் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார். இந்த ரூ.30 ஆயிரம் கோடி பணம் என்பது, நாட்டில் ஒரு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாயப்புத்திட்டத்தை நடத்த போதுமான நிதியாகும்.
மிசோரம் மாநிலத்தை கிழக்கு இந்தியாவின் நுழைவுவாயிலாக மாற்றுவோம். அடுத்த ஆண்டு 11 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
கடந்த 1987-ம் ஆண்டு எனது தந்தை என்னை அழைத்துச் சென்று மிசோரம் மாநிலத்தின் சாலைகளை காரில் எனக்குச் சுற்றிக்காட்டினார். நான் சரியான நேரத்துக்கு இந்து வந்திருக்கிறேன். தேர்தலுப்பின் மாநிலத்துக்கு என் தந்தையைப் போன்று ஏதாவது செய்ய இருக்கிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.