Published : 28 Nov 2018 09:45 AM
Last Updated : 28 Nov 2018 09:45 AM

‘நான் காஷ்மீர் பிராமணன்’: ராஜஸ்தானில் ராகுல் காந்தி தகவல்

குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ராகுல் காந்தி இந்துக் கோயில்களுக்கு செல்லத் தொடங்கினார். பாஜகவுக்கு போட்டியாக இந்துக்களின் வாக்கு களைப் பெற மென்மையான இந்துத்வாவை ராகுல் காந்தி கடைபிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலுக்கு ராகுல் காந்தி நேற்று முன்தினம் சென்று வழிபட்டார். சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது, கோயிலின் பூசாரி, பூஜையின்போது சொல்வதற்காக ராகுலின் கோத்திரம் குறித்து கேட்டார். அதற்கு ராகுல், ‘‘நான் காஷ்மீர் மாநிலத்தின் கவுல் எனப்படும் பிராமண சாதியைச் சேர்ந்தவன். எனது கோத்திரம் தத்தாத்ரேய கோத்திரம்’’என்று ராகுல் கூறினார்.

ராகுல் காந்தி தன்னைக் காஷ்மீரைச் சேர்ந்த கவுல் பிராமணர், என்று கூறியதை கோயிலின் பூசாரி தினானாத் கவுல் உறுதிப்படுத்தினார். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் பிரம்மா கோயிலுக்கு வந்து வழிபட்டதையும் அதற்கான ஆவணங்கள் கோயிலில் இருப்பதாகவும் பூசாரி தினானாத் கவுல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். கோயிலின் வருகைப் பதிவேட்டில் ராகுல் காந்தி எழுதிய குறிப்பில், ‘‘புஷ்கர் கோயிலுக்கு வந்து வழிபட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலும், உலகிலும் அமைதி நிலவி சகோதரத்துவம் நிலைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x