

‘துயரத்துடன் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்று கூறி, மனைவியிடம் இருந்து விவகாரத்து கோரிய பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், திடீரென விவகாரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
தேஜ் பிரதாப் யாதவ், பிஹார் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை கடந்த மே 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் பாட்னாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர்.
திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனையடுத்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் தேஜ் பிரதாப். கடந்த நவ.2-ம் தேதி பாட்னா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரிய தேஜ் பிரதாப் யாதவ், ‘துயரத்துடன் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்று தெரிவித்தார்.
முன்னதாக, ராஞ்சியில் உள்ள தனது தந்தை லாலு பிரசாத் யாதவைச் சந்தித்தவர், விவாகரத்து பெற்று தருமாறு கோரினார். ஆனால் அவரின் முடிவுக்கு தாய் ராப்ரி தேவி உட்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபம் கொண்ட தேஜ் பிரதாப் யாதவ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த பிரச்சினை லாலு குடும்பத்திலும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் அரசியல் நடவடிக்கைக்கும் பின்னடைவாக உருவானது. லாலு பிரசாத்தின் இரண்டாவது மகனும், பிஹார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவின் அரசியல் நடவடிக்கையையும் முடக்கியது. குடும்பத்தில் எழந்த இந்த திடீர் பிரச்சினையால் மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் பிஹார் அரசுக்கு எதிரான ரத யாத்திரை ஆகியவற்றையும் தேஜஸ்வி யாதவ் நிறுத்தி வைத்து இருந்தார்.
இந்தநிலையில் விவகாரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தேஜ் பிரதாப் திடீரென திரும்ப பெற்றுள்ளார். பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை திரும்ப பெறுவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினரின் கடுமையான வற்புறுத்தல் காரணமாக அவர் விருப்பமின்றி இந்த முடிவை எடுத்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் பணிகளில் வேகம் காட்ட வேண்டி சூழல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லாலு குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.