

செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை தீபா படுகோன் தவிர்த்து, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தி யுகவ் நிறுவனம் சார்பில் ‘இன்புளுயன்ஸர் இன்டக்ஸ் 2018’ என்ற தலைப்பில் மக்களைக் கவர்ந்த செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. அதன்படி, பாலிவுட் நடிகர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 60 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஏறக்குறைய 1,948 பேரிடம் உலகம் முழுவதிலும் ஆன்லைன் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக்கணிப்பில் விழிப்புணர்வு, விருப்பம், நம்பிக்கை, செல்வாக்கு ஆகிய கூறுகளின் மூலம், செல்வாக்கு மிகுந்தவர்கள் நடிக்கும் விளம்பரங்களான உடல் நலம், அழகு, தனிப்பட்ட அக்கறை, உணவு, ஆடைகள், ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள், பானங்கள், போக்குவரத்து, நிதிச்சேவை ஆகியவற்றின் அடிப்படையிலும் மக்களைக் கவர்ந்தவர்கள் குறித்துக் கேட்கப்பட்டது.
கருத்துக்கணிப்பின் முடிவுகளை யுகவ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், மக்களின் விருப்பம், நம்பிக்கை, தனித்துவம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் 10 செல்வாக்கு மிகுந்த இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதலிடத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இடம் பெற்றுள்ளார், 2-ம் இடத்தில் இந்தி நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றார்.
அதன்பின் 3-வதுஇடத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும், 4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும், கோலி 6-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர். இந்தி நடிகர் அக்ஷய்குமார் 5-வது இடம் பிடித்துள்ளார்.
நடிகர்கள் அமீர் கான், ஷாருக் கான் முறையே 7-வது, 8-வது இடத்தையும், நடிகை அலியா பாட், பிரியங்கா சோப்ரா 9 மற்றும் 10-வது இடங்களிலும் உள்ளனர்.
கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளில் மக்களைக் கவர்ந்தவர்கள் பட்டியலில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 15-வது இடத்தில் உள்ளார்.
இதில் நடிகர் அமிதாப் பச்சன் கார்ப்பரேட் விளம்பரம், அரசு விளம்பரம், வழிப்புணர்வு பிரச்சாரம், சுற்றுலாத்துறை ஆகிய விளம்பரங்களில் நடித்து மக்களைக் கவர்ந்துள்ளார். நடிகை தீபிகா படுகோன் எல் ஓரியல் பாரிஸ், ஜியோ,ஆக்சிஸ் வங்கி, தனிஷ்க் உள்ளிட்ட அழகு சாதனங்கள், நகைகள் விளம்பரங்களில் நடித்து மக்களை ஈர்த்துள்ளார்.
தோனி, சச்சின், விராட் கோலி ஆகியோர் ஆட்டோமொபைல் துறை, தொழில்நுட்பம், பானங்கள் ஆகிய பிரிவில் நடித்து மக்களிடம் புகழ்பெற்றுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்தது.