

‘உத்தரப் பிரதேச முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் வருண் காந்தி’ என்று அவரது தாயாரும் மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 71 இடங்கள் கிடைத்தன. இதனால் மாநிலத்தின் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என அந்தக் கட்சி உறுதியாக நம்புகிறது. எனினும் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் முதல்வர் பதவிக்கு வருண் காந்தி பொருத்த மானவர் என்று அவரது தாயார் மேனகா காந்தி பகிரங்கமாக பேசியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தனது தொகுதியான பிலிபித்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
‘உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அதற்கு வருண் தலைமை ஏற்பதாக இருந்தால் சொல்லவே வேண்டாம், பிலிபித்வாசிகள் நினைப்பது எல்லாம் நிறைவேறும்.
வருண் பல்வேறு நாளிதழ் களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். தொடர்ந்து இரண்டா வது முறையாக எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன’ என்று அவர் தெரிவித்தார்.
மேனகாவின் கருத்து குறித்து மாநில பாஜக தலைவர் லஷ்மிகாந்த் வாஜ்பாய் கூறியபோது ‘இது மேனகாவின் சொந்தக் கருத்து. இதன் மீது கருத்து கூறுவதற்கு உகந்த நேரம் இன்னும் வரவில்லை’ எனத் தெரிவித்தார்.
மற்றொரு மூத்த தலைவரும் பாஜக எம்பியுமான வினய் கட்டியார் கூறியபோது, ‘இந்த விஷயத்தில் கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், கட்சியின் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. முதல்வர் வேட்பாளர் வாய்ப்புக்காக பலர் காத்திருக்கின்றனர்’ எனக் கூறினார்.
அமேதிக்கு அருகில் உள்ள சுல்தான்பூர் தொகுதி எம்பியாக இருக்கும் வருண் காந்தி, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவராக உள்ளார். கட்சியின் புதிய தேசிய தலைவரான அமித் ஷா அமைக்க இருக்கும் புதிய குழுவிலும் இடம் பெற அவர் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
கட்சியின் மாநிலத் தலைவரான லஷ்மிகாந்த் வாஜ்பாய், மூத்த தலைவர்கள் வினய் கட்டியார், கல்யாண்சிங் உள்பட பலர் முதல்வர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். அந்தப் போட்டியில் வருண் காந்தியும் களம் இறங்கியுள்ளார்.