

மேட்டூர் அணைக்கு, விநாடிக்கு 42,347 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 90.09 அடியாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள், மேட்டூர் நீராதாரத்தை நம்பி உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 46,946 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 21,103 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாக உள்ள நிலையில், ஓரிரு நாளில் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிடும்.
அதே போல, கபினி அணைக்கு விநாடிக்கு 31,509 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 34 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 2-ம் தேதி விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 42,347 கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 6 அடி உயர்ந்து, நேற்று முன்தினம் 84.19 அடியாக இருந்தது, நேற்று காலை 90.19 அடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு ஆக. 2-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து, சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு 52 டிஎம்சியாக உள்ளது. எனவே, தமிழக முதல்வர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட விரைவில் உத்தரவிடுவார் என எதிர்பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.
ஒகேனக்கல்லில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி, 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. மாலையில் நீர்வரத்து சற்றே குறைந்து, விநாடிக்கு 38 ஆயிரம் கன அடியாக இருந்தது.